Wednesday, June 13, 2007

காதலைப் பாடுதல்....


என் கவிதை பாடுவது
எல்லாமே அரசியலாய்....
பண்பட்ட இதயத்துப்
பாடலெனப் பாசாங்குப்
பொன் பூச்சில் ஊறிப்
பவனி வரும் பாடலொடு
என் மூச்சு நின்றால்
என்னாகும் என் பாடு.....?

இருந்தாலும் இந்த
இயல்பிழந்த தேசத்தில்...
மருந்தேதும் இன்றி
மடிகின்ற குழந்தைக்கு,
குரும்பட்டித் தேர் கட்டி,
குருவிகளின் குரல் காட்டி,
குறுங்கால மகிழ்வூட்ட
பொறுக்குமோ கவி மனசு...?

மண் பட்ட பாட்டை;
மக்கள் உறும் துயரத்தை;
புண் பட்டுப் போகும் எம்
பூவின் மென் இதயத்தை;
கண் கண்ட காடைக்
காட்டேரிக் கடைக்குணத்தை
காகிதத்தில் ஏத்தாத
'கவிப்பாவி' ஆவேனோ?

மண் பட்ட,பெரும் பாடு
மா கொடிது அதை விட-ஓர்
கண் பட்டு நான் பட்ட
கதை பெரிது-காற்று வழி
மென்பட்டு இதழில்
மிதந்து வரும் புன்னகையில்
மின் சொட்டுப் பாய்ந்த-உயிர்க்
காதலைப் பாடுவேன் பின்!

5 comments:

thamillvaanan said...

அன்புள்ள நண்பரே

உங்கள் கவிதைகள் அனைத்தையும் வாசித்தேன். நன்று.

நீங்கள் தற்போதும் தாயகத்தில் வசித்துக்கொண்டிருந்தால் புனைபெயரில் உங்கள் பதிவுகளை செய்யுங்கள்.

நன்றி.

Anonymous said...

துடிப்புள்ள இளம் எழுத்தாளரே உங்கள் கவிதைகள் அருமை தொடர்ந்து வாசிக்கின்றேன். மண்ணின் மீதான உங்கல் பற்று உங்கள் கவிதை வரிகளில் பிரதிபலிக்கின்றன. எழுதுங்கள் இறுதி மூச்சுள்ளவரை உங்கள் வளர்ச்சியையும் வரிகளையும் தொடர்ந்து நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.

Anonymous said...

மிக்க நான்றாக சொன்னீர்
முற்றிலும் உண்மை!

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

நடையிருக்கிறது நல்லாக- பொருட்
கடையிருக்கிறது சொல்லாக

வேல் சாரங்கன் said...

மிக்க நன்றி குருபரன் அண்ணா..