Sunday, November 11, 2007

தெய்வம் நகும்...!




'ஐயா..'
பொய் உடலின்
பாதாளத்திலிருந்து
பொலிவிழந்தொலித்த
பாவக்குரலின்
ஆவி தனைப் பார்க்க
ஆவலுடன் தலையசைத்தேன்...

வெளுத்த முடியும்-அதை சுமக்கும்
பழுத்த உடலும்
கழுத்து வரை
இழுத்து முடித்த தாடியுமாய்
தழு தழுத்துக் கெஞ்சியது....
"பிச்சை போடுங்க சாமி..."

நடத்துனர் கொடுத்த
மீதிச் சில்லறையை
நடுங்கும் கரத்தில்
நான் வைக்க,
கூப்பிய கைக்கமலம் விரிந்து
முன்னிருந்த
முதலாளி முன் நிலைக்க,
சட்டைப்பை தட்டிக்
கையெடுத்துக் கூசாமல்
சட்டென்று சொன்னார்....
''சில்லறையாய் இல்லையப்பா..."

ஆவி சுமந்து
ஆக்கை,
ஆடி நகர்ந்து விட
வாடி, உடல் மெலிந்து,
வறுமைக் களை படிந்து,
காலிழந்து ,கைத்தடியால்
மேனி சுமந்தவனும்....

பொட்டிழந்து,
பொலிவிழந்து,
பெண் சிசுவை பத்திரமாய்
இடுப்பில் சுமந்தவளும்...

பத்தகவை ஆகாத
பாலகனும் எனப் பல
பாத்திரங்கள் வந்து
கை நீட்டிப் போயின....
பதில் மட்டும் மாறவில்லை... !

பேருந்து புறப்பட
நேரம் நெருங்குகையில்...,
பட்டு நூல் வேட்டி
மடித்து சொருகி- நுதல்
பொட்டுடடனும்
பூசிப் பட்டை வைத்த நீறுடனும்
பக்திமான் ஒருவர்
தட்டுடன் ஏறினார்...

"அம்மாளாச்சிக்கு
அபிஷேகம்...."

இடுப்பின்
மடிப்பவிழ்த்து
பணப்பை திறந்தது...!

சில்லறைகள்
சிலுசிலுக்க
சிரிக்கிறாள் அம்மாளாச்சி.....!!

8 comments:

Anonymous said...

பொருள் தேடும் உலகம் இதில்
"பாவம்" என்ற சொல்லிற்கு இடமில்லை
இடுப்பின்
மடிப்பவிழ்த்து
பணப்பை திறக்கும்
அம்மாளாச்சியின் அபிஷேகம் எனில்
அதில் கூட இருக்கு சுயநலம்
வெளுத்த முடியும்-அதை சுமக்கும்
பழுத்த உடலையும்
கழுத்து வரை
இழுத்து முடித்த தாடியையும்
தழு தழுத்த குரலும்
காதுகளிற்கு எட்டிவிட்டால்
சொல்ல வார்த்தைகள் இல்லை
புதுயுக்மும் படைத்துவிடலாம்

வேல் சாரங்கன் said...

நன்றி வானதி...

உங்கள் தரமான விமர்சனங்களை தொடர்ந்தும் எதிர் பார்க்கிறேன்...!

unarvukal said...

அழகிய யாழ்மண் அழகிழந்த கோலம்.

அருமையான கவிதை வரிகள்

கரவையூரான் said...

உங்கள் கவிதை என் கண்களை பனிக்க வைத்தது. ஆற்றாமை என் நெஞ்சை சுடுகிறது. தொலைவில் இருந்து வேதனைப்படுவதைத் தவிர வேறென்ன செய்வோம்..

Anonymous said...

Hi, glad that u took my comment seriously, was telling one of my non-tamil friends abt ur poem, she said she would love to read them if they could be translated into English, and it would promote inter ethnic harmony, what do u think?

இனியவள் said...

வித்தியாசமான் கவி படைப்பு,

நன்றி

Anonymous said...

Gostei muito desse post e seu blog é muito interessante, vou passar por aqui sempre =) Depois dá uma passada lá no meu site, que é sobre o CresceNet, espero que goste. O endereço dele é http://www.provedorcrescenet.com . Um abraço.

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

கல்லில் கடவுள் இருப்பதாக நினைக்கும் மனிதன்
தன்னில் கடவுளை உணர்தல் எப்போது?