Saturday, March 28, 2009

இழந்த நெஞ்சுரம்....!


வானம் தீ உமிழ்ந்து
வாரி இறைப்பது போல்
வானில் கரும் பறவை
சாகசங்கள் காட்டியது......
ஊனமுற வைப்பதனால்;
உயிர் குடித்து உடலத்தை,
தானமென மண்ணில்
தொகை தொகையாய்
குவிப்பதனால்
உவகையுறும்
எண்ணமுடன்
ஊழிக் குரல் எடுத்துக்
கூவின அக்
கொலைக் கணைகள்.......

குஞ்சு குருமன்கள்
குருத்தினிலே கருகலுற,
பஞ்சுப் பொதி தீயில்
பற்றியது போல்
தேசம்.....!

நஞ்சுப் புகையில்
நாசி நனைவுற்று,
வெஞ்சமரின் கோரத்தில்
வேகியது அவர்
சுவாசம்.....

சொந்த இடம் நகர்ந்து,
தொலைவாகிப் பலநாளாய்
அந்தமில் பயணத்தில்
ஆயிரம் இடம் மாறி,
சந்திர வெளியே
சத்திரமாய் அவர்
வாழ்வு..........

சாக்கணத்தை எதிர்நோக்கி,
ஏக்கமுடன்
உயிர் வாழ்க்கை......

இருந்தாலும்,நெஞ்சத்தின்
இறுமாப்பு
இழக்காமல்
எம் தேசம்;
எம் வாழ்வு;
எம் மானம்
என எண்ணி....,
நம்பிக்கை என்ற
நன் மரமாய் வேரூன்றி,
நெஞ்சு நிமிர்த்தி
நின்றார்;விழவில்லை.....!

தம் வாழ்வைக்
காக்கும் கரங்களினால்
துணிவுற்றார்...!

இருந்தாலும்
நெடும் போரின்
துயரம் வலுவுற்று,
பட்டினியால், பச்சைக்
குழந்தைகளைப்
பலியிட்டு..,
பெரும் வடுக்கள் மாற்ற
மருந்தின்றி
மடிந்திட்டார்.....


அவலத்தின் கடும்
வலியால்
ஆவி நலிவுற்று,
வேறு வழியின்றி
விடை பெறும்
முடிவுற்றார்.....!

மண் தொட்டு வணங்கி-தாய்
மடியென்று கண் கலங்கி
புண் பட்ட உடலங்கள்
சுமந்து முன்
நகர்ந்தார்

பல நாள்கள் துவைக்காத
வேட்டி கிழித்து
வெறும் கையை
மேலுயர்த்தி
வெறுப்புற்ற வாழ்வின்
கடும் பயணம் தொடங்கியது
**உயிர்குடிக்கும்
வேகம்-கால்கள

திசை
தடுக்கும்
தொல் நோக்கம்
முதுகு துளைத்து
மார்பூடு வெளியேற
முன் நோக்கி சாய்ந்தார்
முழுத்துயரும் முடிவுற்றார்.....!!

6 comments:

sukaa said...

very nice!!

Anonymous said...

NicE!!!!
Keep it up!!!!!!

சுவடி மின் நூலக குழுமம் said...

அடியேனுக்குத் தெரிந்தவரை தொழில்நுட்ப உதவிகள் செய்ய முடியும்.தனி இணையத்திற்கு மாற்றுங்கள்.

Rgds,
Prabu

வேல் சாரங்கன் said...

Thanks Sukanthan & Anony.
Thank you Prabu.. I will talk to u..

வேல் சாரங்கன் said...
This comment has been removed by the author.
கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு
பொறுமைக்கு
புகழுக்கு
அறிவுக்கு
அழகுக்கு

ஆனால்
எல்லைகள் கடந்திருப்பது எங்கள்
அழுகையும் துயரமும்