Friday, June 7, 2019

சூரியக்குளிர்

பால் வீதியின் ஒளிப்பிரவாகம்;
அச்சில் அசையும் கோள்கள் ....

தகிக்கும் சூரியன்....!

பன்னீர்  தெளிக்கும் நிலா....;
பரபரப்புகளூடே பொறுமைபூத்துக்கிடக்கும்
பூமி... ,
படைப்பின் நெடு நடையில்.....!

ஜீவிதத்தின் மீதான
கேள்விக்குறியோடு
புதிராகவே தொடரும்
 செவ்வாய்....;
சிதறிக்கிடக்கும் தாரகைகளாய்.....,
சுழலும் கோள்களாய்.....,
மின்மினிக்கோலங்கள்......


யாதொன்றும்
தீண்டல்களற்ற பெரு வெளி.....
அமைதி பூத்துக்கிடக்கிறது....
நேர் கோட்டில் சந்திக்கையில்
தெறிக்கும் நிசப்த நெருடல்கள்
தவிர்த்து.....
சலசலப்புகளை சந்திப்பதில்லை
அண்டப்பெருவெளி.....

சூரியன் குளிர்வதில்லை....

நினைவுகள் மீளும் பெரு வெளியில்
ஒரு பொடி நடை.....

அதே இரண்டு கால்கள் ......!!


Thursday, March 1, 2018

தலைமுறைகள்


மானிடம் மரித்த பூமியில்
சீவித்திருக்கிறோம்.....
கத்தியின் கூர்நுனியில்
நகரும் பாதங்கள் போல் வாழ்வு....

அந்தகாரத்து திகில் நாள்களில்
அன்னையர்கள் நம் பௌதீகத்தொடர்ப்பறுத்த போது
ஆரத்தி எடுத்துக்கொண்டன
வெடியொலிகளும் கந்தக தூபமும்......

தசாப்தங்கள் பலகடந்த போர் நிலமே வாழ்புலம் ஆகிப்போனது
பல தலைமுறைகளுக்கு......

போரின் மணமறியா
புதுத்தலைமுறைக்கு
வாளும் வன்முறையும் சொல்லிக்கொடுத்தது யார்.....?

புதுப்பூக்களாய் சிரிக்கும் உங்கள்
பிஞ்சுகளுக்கு பூச்செண்டும்
மோட்டார் காரும் வாங்கிக்கொடுங்கள்....
விற்கப்படாமலே கிடக்கட்டும்
விளையாட்டு துப்பாக்கிகள்......!

சுவரிலோ ஆசனத்திலோ
குழந்தை மோதிவிட்டதா .....
மோதியது குழந்தை என சொல்லிக்கொடுங்கள்.....
அ•°•றிணைக்கு உயிர்கொடுக்காமல்.....

ஆனால்.....
நினைவுகள் பத்திரம்.......
மனங்களை விகாரமுறுத்தாத
மென்போதனைகளோடு.......
நீள்கனவுகளின் ஆழ்விதைப்பாய்
இருக்கட்டும்
நம் தலைமுறைகடக்கும் தகவல்கள்...

போரறியா தலைமுறையின்
புலர்வுக்குப்பின்னும்.....
நிறைந்தே கிடக்கின்றன
உறவுகள் தேடும் நம் கூடாரங்கள்.....

வழிமாறிய தலைமைகள்
கைகுலுக்கிக்கொள்கையிலும்
மூடியே கிடக்கின்றன
விசாரணையற்ற சிறைக்கூடங்கள்....

மறுபுறம்....
பெரிய பாம்பினால்
விழுங்கப்பட்ட பின்பு .....
பூச்சியத்திலிருந்து தாயமுருட்டி
ஏணிகள் விலத்தி
எண் எண்ணாய் நகரத்தலைப்படும்
முதிய வழிகாட்டிகள்......

ஏரிக்கரையில் உக்கிப்போகாமலே
மீட்கப்படுகிறது;
பச்சை சீருடை........
இடைத்தலைமுறையின் நினைவுகளை போல .........

Monday, November 27, 2017

26.11

செந்தமிழ் வாழ்த்திடும் கொடையாகினாய்
சிந்திய குருதியில் சிறையாகினாய்- உன்
முந்தையர் பாதையில் முடிவாகினாய்-பேர்
அந்தமில் ஈகையால் முதலாகினாய்..

வைகறை எண்ணி அறைகூவினாய் -நம்
வாசலில் வசந்தத்தை விலை பேசினாய்
வந்தது சேரமுன் இளைப்பாறினாய் -விடி
வானில் இருந்து நீ பூத்தூவுவாய்....

-வேல் சாரங்கன்

Friday, November 10, 2017

மழை



மெல்லப்பொழிகிறாய்.....,
மேதினியின் மேனியதில்
செல்லத்தழுவலுடன்...!
சென்றாண்டு எந்தச்
சிறையிருந்து நீ மீண்டாய்....?
**

கடுங்கோடை வெயில் காய்ந்து
களைப்பாகி ....
நெடுங்காலம் நீயின்றி
துரும்பாகி...
அருந்தாமல் இருந்தாள் உன்
புவிக்காதலி- பசலை
நெருப்பாகித்தகித்தாள் உன்
அடிச்சேவகி....

***

துளியாகி வீழ்ந்தாய் புவி
மடி மீதிலே... ;அவள்
நறுந்துகை தெளித்தாள்
அது மண் வாசமே.......!

****

துளியாய், தூறலாய்
தழுவிக்கிளர்வுற்று;
பெருக்காய் ,பெருமழையாய்
பெருவலியாய் பிரவகித்தாய்........

*****

தெருக்கள் குளிப்பாட்டி,
திண்ணைகளை தூய்தாக்கி ,
மண்ணுக்குள் வடிவாய் ....
மலர்விப்பாய் இளவேனில்......

பல குளங்கள் நிறைப்பாய்,
பச்சையங்கள் புதுப்பிப்பாய்,
உலகுயிர்கள் வாழ
உவப்பாய் உணவளிப்பாய்.....

******

மெல்ல தழுவிடிலோ
வலியுணர்த்தாதுன் சேர்க்கை....
செல்லத்தழுவலுடன் சிந்திப்போ
அது போதும் .....
மெல்லப்பிரசவிக்கும் பூமி.....!!

Saturday, October 28, 2017

மரணித்துப்போனவனின் முகநூல்....


காலங்கள் கடந்தும்
இடுகையிடப்படாத கணக்கிற்கு
நட்பு வேண்டுகை கொடுத்துப்ப்போகின்றன ;
புதுமுகங்கள்.....

கிராமத்து வீடுகளின்
கிடுகு வேலிக்கடவைகளூடு
நீளப்பயணிக்கும்
கால் நடை போல்
கணக்குகள் தாவிக்
கண்டுகொள்கிறாள்;
தொடர்பு தொலைந்து போன பள்ளிக்காதலி........!
தெரிந்தும் சொல்லத்தயங்கும்
குறி சொல்பவன் போல
ஆதி சொல்லி, பாதை சொல்லி,
அந்தம் சொல்லாதிருக்கிறது காலக்கோடு......!!

நன்றி சொல்லப்படாமலே கிடக்கின்றன
நூற்றுக்கணக்கான
"அமைதியுள் உறைக"கள் ........!

மனங்களில் பதிவுறும் வாழ்வை
அறிவுறுத்துகின்றன
தொடர்ந்தும் விருப்பிடப்படாத பதிவுகள்.......!!

Friday, November 27, 2015

துயின்று எழும் தூயவர்கள்......!

கால நதி  கண் முன்
       கடந்து நகர்கையிலும்,உங்கள்
கனவு வெளி மட்டும்
       நீண்டு விரிகிறது............

சொல்லாயிரங்களிலும்
      சிக்காத ஈகையுடன்
பல்லாயிரங்களாய்
      புதையுண்டு போனவரே .......

விதைகளாய் முளைத்து
      விழுதெறிந்த செய்தியினைக்
கதைகளாய்க்  கேட்கும்
       கட்டிளமைச் சந்ததியாய்
மீள்பிறப்பின் கட்டியமோ.....
      ரயில் கடவை மீதொளிர்ந்த தீபம்.....?

Saturday, September 26, 2015

விழாக்கால கொள்வனவு....

விழாக்காலத்து
விற்பனைத்தெரு ஒன்றில்......
விழிகளைக்கொடுத்து
இதயம் வாங்கிப்போனாள் ஒருத்தி...;
விலைகள் ஏதும் கொடுக்காமல்.....!

செவ்வொளி சிந்தும்
கண்ணாடி ரோஜாக்கு
விலை கேக்கிறான் அவன்.......!

Wednesday, September 23, 2015

சரித்திரத்தில் சரிபாதி நீ....


நீ உன் வயிற்றில் தீ மூட்டினாய்...
தீவின் திசைகள் எங்கும் பற்றிக்கொண்டது,
அகிம்சை அக்கினி......!

கனன்ற தீயின் சூரிய ஒளியில்
களையிழந்து போயிற்று ,
காந்தீய தீபம்....!

அகண்ட தேசத்தின்
இருண்ட குகைகளில் தெறித்த
உன் அகிம்சை ஒளியில் மின்னின ,
நரிகளின் விழிகள்.....!

 யுத்த யுகம் பேசும் நாளைய சரித்திரத்தில் ,
மொத்தத்தில் சரி பாதி,
நீயும் உன் மார்க்கமும்....!!

மீதிக்குள் பதிவுறும்
போரும் போர் குற்றங்களும்......

Wednesday, June 5, 2013

துடுப்பிழந்த படகு!





நாங்கள் நதிகளை நடந்து கடந்தோம்
நட்சத்திரங்களை எண்ணிச்சிலிர்த்தோம்
நீண்டு விரிந்த தெருக்களின் மீது
நிலவொளியில் எம் பாதம் நனைத்தோம்...

எங்கள் கரங்களில் மானம் இருந்தது...;
எங்கள் தோள்களில் பாரம் இருந்தது....

நட்ட நடுநிசி நேரத்தில் கூட
நங்கையர் தெருவினில் நடக்க முடிந்தது...
பட்டப்பகல் போல் இரவினில் கூட
பயமின்றி பல மைல் போக முடிந்தது....

கிட்டக்குரைக்கிற நாயொலி கேட்டு
துட்டர் என்றெண்ணும் இன்று போலன்றி
தீரர் என்றெண்ணி துணிந்து கண்ணை
மூடிக்கிடக்க முடிந்தது அந்நாள்........

எங்கள் சிரங்களில் மிடுக்கு இருந்தது;
எங்கள் படகுக்கு துடுப்பு இருந்தது.....!

தாமே துணிந்தவர் இருக்கும் வரைக்கும்
தூய்மை இருந்தது, தானை வரைக்கும்!
துணிய வைத்தவர் துலங்க மறுக்க;
தெருவில் கண்டவர் ஓடி ஒழிக்க;
பெருமை மாறி பிணியென உணர
மனதுகள் துணிந்தது கசக்கும் நிசம்தான்...!

அறுவடை மீது பங்கும் வேண்டும்
அடுத்தவன் மகனே அறுக்கவும் வேண்டும்
என்ற மன நிலை வந்ததன் பின்பும்
தன் பிடி தளர்த்தத் தயங்கியதாலோ.....
கால நீட்சி காலனாய் மாறும்
கொடுமை உணரத்தவறியதாலோ....
'ப்ரூடஸ்கள்' அருகினில் கூட இருக்க
அரசவை நடத்திச்சென்றதனாலோ....

எங்கள் படகு துடுப்பை இழந்தது...
அலைக்கும் கடலில் ஆடிக்கிடக்குது....!!

Wednesday, May 1, 2013

மகனுக்கு மயிலில்லை;சிவனுக்கும் மானமில்லை...

மண் பிரிந்து பல ஊர்கள் அகதி என அலைந்து
கண்களதில் ஒளியிழந்து கட்டுடலும் தேய்ந்து
பெண்ணில்,மண் பொன்னில் நாட்டமிழந்தோய்ந்து
விண்ணுலகம் ஏகவேனக் காத்திருந்தார் விசுவர்....

அறமொன்றே கூடவரும் மற்றொன்று இல்லை
மறலி வரும் நேரத்தில் வரும் சுடலை ஞானம்
கறங்கு உடல் பிரிகின்ற கணமெண்ணி, தம்வாய்
திறந்து அவர் கிடக்கின்றார் இழுக்கிறது 'சேடம்'...!

இருந்தாலும் அவர் ஆவி பிரியாது போலும்
மருந்தேதும் திருத்தாமல் மனிதர் அவர் மனதுள்
பெருந்துயரொன்றுள்ளதென பேசுமொலிகேட்டு
முருகன் அவர் குலதெய்வம் அருகில் வரலானான்!

வரமொன்று கேளென்றான் ஈசனவன் மைந்தன்
கரம் கூப்பி கேட்கின்றார் கண்கள் நீர் உகுத்தார்
'தர வேண்டும் நான் உதித்த மண்ணிலேயே சாக'
சிரம் தாழ்ந்தான் முருகன் அவன் செய்வதறியாது...

முருகன் தன் கோவிலினை பார்க்கவென எண்ணி
தெருவழியாய் போனான் விசுவர் மண் நோக்கி,
அருகிவரும் மயிலினத்தால் வாகனமும் இன்றி!
திருப்பி அவர் விட்டிட்டார் முருகனையும் கூட...

தந்தையிடம் போனான் மயிலென்றான் மைந்தன்
சிந்தையிலே துயர் படிந்த ஈசன், மகன் நோக்கி
எந்துகிலே நானிழந்தேன் தோலில்லை உடுக்க;
மைந்தா நீ புலி தேடென் மானம் மீழ் என்றான்....

Tuesday, May 3, 2011

''ரஷ்யாவா, சைனாவா....?''

இளமாலை ஒளிசாயும் இரவுக்காலம்- இது
வளமான அணி ஒன்றின் பிரிவுக்காலம்
தளராது சளையாது பெரும்போராடி, கல்விக்
களம் ஒன்றின் கரை சேரும் கனவுக் காலம்..............

மொழியொன்று எழுகின்றது, வண்ணக்
கவியொன்று பொழிகின்றது........
விழியின்று துளிதூவத்தவிர்க்கின்ற போதும்
இவர் இதயங்கள் அழுகின்ற(ன)து.....!

அணியொன்று வழி கண்டது - இனி
அவரவர் விதி கொண்டது......,
அது வென்று திசை மாறி அகல்கின்ற போதும்
அகம் காக்க அகம் கொள்ளுமா .........?

இடர் வந்து தடம் இட்டது-அதை
இனிதாக இது வென்றது
இருபத்தி எட்டென்று பெயர் கூறி ,பீடத்தில்
இணையற்று நடந்திட்டது...............

முப்பதை அணைத்திட்டது- அதன்
முதுகினில் தட்டி ஓடென்று சொல்லி
அருகினில் இது வந்தது.....!

முன்னேற வழி சொன்னது - நல்ல
முயற்சியில் தளரா முழுத்திறன் காட்டி
முதல்வனாய் அது நின்றது.....!

***
நிஜங்கள் நிலை மாறித்
தொலைவாகலாம்
நினைவுகள் மறைவாகுமா.....?

முதல் முதல் பீடத்தில்
கால் வைத்த முப்பதை
அணைத்திட்ட அணி அல்லவா...?

சிந்தனைக்குதிரைகள்
பின் நோக்கி விரைகையில்
சந்தித்த அற்றை நாள்
நினைவுகளில், ஈரம்
சற்றும் உலராமல்
பசுமை இருக்கிறது.....!

இருபத்தி எட்டும் முப்பதும்
ஒட்டிக்கொண்ட
அந்த இருபத்தியொரு நாள்கள்.....
இன்றும் தொடரும்
இழையறா நட்பின்
இனிய சாட்சிகளாய்.......,
பாசத்தீ பற்ற வைத்த
பசுமைப் பொழுதுகளாய்.......,
தங்கள்
பயனைப் பறை சாற்றி நிற்க...,
நம் இளையோரை எட்டாத
இனிய பொழுதுகளின்
கலக்கம்..,
காதுகளில் கேட்கிறது......,
குறைப்பிரசவ நட்புகளாய்......!

நம்மை அறியா அவர்கள்.....;
அவர்களை அறியா நாம்....!

கட்டியம் சொல்வது என்ன தெரியுமா?
நாளைய விடுதிகளில் நம்
‘H .O’ களின் காதுகளில்
கேட்டும் கேட்காமலும்
வெள்ளைக் கோட்டுகள்
கிசு கிசுக்கும்......
இந்த அண்ணா
''ரஷ்யாவா, சைனாவா....?''


ஒரு சின்ன வேண்டுகோள்.....

குடிசையின் கூரை துளையுண்டு
நிலம் எங்கும் மழையின் கோலம்..........
கூரையை சரி செய்வோமா,இல்லை
குடிசையையே அழிப்போமா.......??

***


*பி.கு- யாழ் மருத்துவ பீடத்தின் இருபத்திஎட்டாம் அணி, பீடத்தை விட்டு விடை பெறும் நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை, பலரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கே பதிவாக்கப்படுகிறது.

Monday, June 1, 2009

இதய மாற்று சத்திரசிகிச்சை......!


கல்லுண்ட நெஞ்சம்
கனிவுண்டு எழுந்துற்று,
மெல்லுண்ட பெண்மை
மேலும் இழகிற்று,
சில்லென்று காற்று
சீதளம் சுமந்துற்று,
சொல்லென்றுரைக்கும்;
சொல்ல முடிவதில்லை......

கண்கள், கோடி
மின்னல்கள் வெட்டும்,
நோக்க நினைத்திருக்கும்
நோக்கும் கால்
மண் நோக்கும்...!
பார்க்கப் பொழுதகலும்,
பாதி உயிர் போய் மீளும்....!
வேர்க்கத் தொடங்கி விடும்,
வேறுலகம் ஆகி விடும்....!


நினைவுகள் கூடிநிறைவாக்கும்
'நீ' யில்லையேனும்
நினைவுகளோடு
நீண்ட பொழுதகலும்.....
நாள்கள் மணிகளாய்,
மணிகள் நிமிடங்களாய்,
நிமிடங்கள் நொடிகளாய்,
சிந்திக்கும் தோறும்
செவ்வணுக்கள் ஒவ்வொன்றும்
சிலிர்த்திருக்கும்....

காலங்கள் கடந்தும்
காரணமறியாத காரியமாய்...,
பாதையறியாது வந்தடைந்த
பயணியாய்,
பிரிவில் ரணம் தரும்
புதிராய்.....
கத்தியின்றி ரத்தமின்றி
உனக்குள் ஒரு
குருசேஷ்திரமே
உருக்கொள்ளும்......
அதுவே பின்பு
அழகிய மலர்கள்
தலையசைக்கும்
நந்த வனமாய் பூக்கும்.....

கூரிய வேலால்
உன் இதயம் கீறப்படும்
அதே கரங்களால்
வருடப்படும்....!
ஒரு துளி குருதியும் சிந்தாமல்,
எந்த வைத்திய நிபுணனும்
இல்லாமல்,
சத்தமில்லாமலே நடந்து முடியும்
ஒரு இதய மாற்று சத்திரசிகிச்சை......!!

Thursday, May 28, 2009

கடவுள்களின் படியிறக்கம்…..!

காலங்களால்
தோற்கடிக்கப்பட்டும்
ஆசைகளால்
ஆக்கிரமிக்கப்பட்டும்
மனிதங்கள்
மிருகங்களான போது
எஞ்சிய மனிதங்களே
கடவுள்களாக்கப்பட்டன......!

மிருகங்கள்
சந்தோசித்தன…..;
தாமும்
கடவுள்களாகும் நாள்களின்
விரைவினை எண்ணி……!!

கணத்தாக்கு….!

என் இதயம்
ஒரு கணம்
உரல் ஆயிற்று;
உன்
பார்வை உலக்கைகள்
பட்டு…..
சிதறிப் பரவின
உடலெங்கும்
நெல் மணிகள்……!

பிரசவங்கள்....!

இந்தக்
கட்டிலில் தான்
நானும் பிறந்தேனாம்….
என் தாய் சொன்னாள்…!
பின்பு இதை
எத்தனையோ
பூச்சிகள்;
எலிகள்;
பூனைகள்
பிரசவ விடுதியாக்கின…..

பின்பு ஒரு நாள்
அதன் சட்டங்களையும்
பலகைகளையும்
‘அவர்கள்’
காவிப் போயினர்…….
பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்தது.…
‘அவர்கள்’ ஏதோ ஒரு
பிரசவத்திற்கு
தயாராகியிருந்தனர்……...

Wednesday, May 27, 2009

முடிந்ததும் முடியாததும்……

புகார் போகாத
அந்தப்
புலரிகளில்
விழித்து
வெளியேறிய போது
புலராத மீதிகளாய்
புகார் கட்டிகளாய்
தெரிந்த
கறுப்பு உருவங்கள்
சுற்றி வளைத்து,
சாய்த்து,
சாரியாய் நிற்க வைத்து,
ஒவ்வொன்றாய்
தலையசைத்து,
தட்டித் தடவி
விடும் வரை
காத்திருப்பு……...
கடிகாரமும்
கண்களுமாய்……
சுய விருப்பின்றி…..

பின்பும் அப்படித்தான்……
கால்கள் கடுக்க….
ஆனால்..,
அவர்களாகவே…….!


பின் இணைப்பு;

எதிர்ப்பு போராட்டங்கள்,
பேரணிகள்,
பகிஷ்கரிப்புகள்,
கடையடைப்புகள்,
வேலை நிறுத்தங்கள்,
நிர்வாக முடக்கல்கள்
எல்லாம் ஈற்றில் ஒடுங்கின…..,
பரமேஸ்வரன் கோவில்
கூட்டுப் பிரார்த்தனையாய்……..!!

நவீன இராமர்கள்....

தெரிந்தோ
தெரியாமலோ
இதயத்து அறைகள்
அசோக வனம் ஆகின…..
ஆனால்.....
வாயு மகன்,
வாலி மகன்
தேடி வரவில்லை;
இராகவனும்
யாரையுமே
தூது விடவில்லை….!

பிந்திய செய்தி…..;
அவனும் ஒரு
அசோக வனத்து
உரிமையாளனாய்….....!!

மாசுக்கள்...!

நீங்கள் மட்டுமல்ல
சகோதரிகளே…...
ஆற்று நீரும்
காற்றும் கூட
வேற்றுடையில் தான்
வருகின்றன.....,
நகருக்குள்....!
யாரிடமிருந்து
யார் கற்றீர்கள்…..?

Wednesday, May 6, 2009

உனது பிரசன்னம்...!


புரட்டப்பட்ட
புத்தகத்தின்
பல நாள் ரேகை படிந்த;
கடந்து போக முடியாத
பக்கங்களிலும்.....

ஒரே பக்கத்தில்
மீள மீள வாசிக்கப்படும்
பந்திகளின் இடையேயான
முற்றுப் புள்ளிகளிலும்.......

படுக்கையறையின்
மேல் முகட்டில்
படர்ந்த
ஒட்டறைகளிடையே
பார்த்துப் பழகிப் போன
பொட்டுப் பூச்சியின்
தரிப்பிலும்.......

மூடப்படாத
கண்களால்
மூன்று நேரம்
தரிசிக்கப்படும்
பெண் சாமிப் படங்களிலும்......


ஏதோ ஒரு
முக்கிய தேதிக்குப் பின்,
கிழிக்கப்படாமல்
தொங்கும்
நாள் காட்டியின்
தேதி எழுத்துகளிலும்.....

இருந்து கொண்டேயிருக்கிறது
உன் பிரசன்னம்......!

Sunday, April 26, 2009

கடல் சூழ் தேசம்...


ஊழிக் குரலாய்
உரசிச் சென்றது
காற்று....

உப்புக் கரித்தது
கல்லில் மோதி
வாயில் விழுந்த
கடல் துளி....

பாசி படர்ந்தும்
வழுக்காது
குழி விழுந்த பாறைகள்.....

ரயில் தெருவின்
ஓரத்தில் இடையிடையே
அசையும் மறைப்புகள்...

பிடி தளராது சுழலும்
குடைகள்....

கல்லில்
மோதும் அலைகள்
நல் வாழ்த்து
சொல்வதாய் கற்பனை....

எல்லாம்
வழமை போலவே....

பாறையோடு
காதல் கொண்டு
அலை சொல்லும்.;
''மறு முறை
முத்தோடு வருகிறேன்...''
முடிந்ததே இல்லை...

மீண்டும் மீண்டும்
பிண எச்சங்களாய்.....

Saturday, March 28, 2009

இழந்த நெஞ்சுரம்....!


வானம் தீ உமிழ்ந்து
வாரி இறைப்பது போல்
வானில் கரும் பறவை
சாகசங்கள் காட்டியது......
ஊனமுற வைப்பதனால்;
உயிர் குடித்து உடலத்தை,
தானமென மண்ணில்
தொகை தொகையாய்
குவிப்பதனால்
உவகையுறும்
எண்ணமுடன்
ஊழிக் குரல் எடுத்துக்
கூவின அக்
கொலைக் கணைகள்.......

குஞ்சு குருமன்கள்
குருத்தினிலே கருகலுற,
பஞ்சுப் பொதி தீயில்
பற்றியது போல்
தேசம்.....!

நஞ்சுப் புகையில்
நாசி நனைவுற்று,
வெஞ்சமரின் கோரத்தில்
வேகியது அவர்
சுவாசம்.....

சொந்த இடம் நகர்ந்து,
தொலைவாகிப் பலநாளாய்
அந்தமில் பயணத்தில்
ஆயிரம் இடம் மாறி,
சந்திர வெளியே
சத்திரமாய் அவர்
வாழ்வு..........

சாக்கணத்தை எதிர்நோக்கி,
ஏக்கமுடன்
உயிர் வாழ்க்கை......

இருந்தாலும்,நெஞ்சத்தின்
இறுமாப்பு
இழக்காமல்
எம் தேசம்;
எம் வாழ்வு;
எம் மானம்
என எண்ணி....,
நம்பிக்கை என்ற
நன் மரமாய் வேரூன்றி,
நெஞ்சு நிமிர்த்தி
நின்றார்;விழவில்லை.....!

தம் வாழ்வைக்
காக்கும் கரங்களினால்
துணிவுற்றார்...!

இருந்தாலும்
நெடும் போரின்
துயரம் வலுவுற்று,
பட்டினியால், பச்சைக்
குழந்தைகளைப்
பலியிட்டு..,
பெரும் வடுக்கள் மாற்ற
மருந்தின்றி
மடிந்திட்டார்.....


அவலத்தின் கடும்
வலியால்
ஆவி நலிவுற்று,
வேறு வழியின்றி
விடை பெறும்
முடிவுற்றார்.....!

மண் தொட்டு வணங்கி-தாய்
மடியென்று கண் கலங்கி
புண் பட்ட உடலங்கள்
சுமந்து முன்
நகர்ந்தார்

பல நாள்கள் துவைக்காத
வேட்டி கிழித்து
வெறும் கையை
மேலுயர்த்தி
வெறுப்புற்ற வாழ்வின்
கடும் பயணம் தொடங்கியது
**உயிர்குடிக்கும்
வேகம்-கால்கள

திசை
தடுக்கும்
தொல் நோக்கம்
முதுகு துளைத்து
மார்பூடு வெளியேற
முன் நோக்கி சாய்ந்தார்
முழுத்துயரும் முடிவுற்றார்.....!!

Saturday, March 21, 2009

விழி தூவி விடைபெறுதல்.....


காதல் என்ற
நிச்சயமற்ற விண்ணப்பத்தால்
கிழித்தெறியப்பட்ட
நட்பு என்ற
நிரந்தர உடன் படிக்கை.....!

மிக ஆழமான
செவிமடுப்பில்
கிரகிக்கப்படும்
அந்தகார
ஓசைகள் போல்....,
எனக்குள்
நான் மூழ்குகையில்
வெளி வரும்-உன்
சலங்கைச் சிணுங்கல்கள்....!

உன்னையும்
என்னையும்
சுமந்து பயணிக்க
இன்னும்
பேருந்துகள் வரும்....!

ஆனால்.....,

வழி இலக்கங்கள்
வெவ்வேறாக......!!

துணை....!

ஒளியின்
சலனமற்று நீளும்
இரவு.......;

மனித வாசனைகள்
தொலைவாகிப் போன
அடர் வனம்.......;

இருதயம் முடுக்கும்
விசித்திர, அமானுஷ்ய
ஓசைகள்.......;

இடமும் வலமுமாய்
கோர்க்கப்பட்ட
பத்து விரல்கள்.....;

நம்பிக்கையில்
நகரும்
நான்கு பாதங்கள்..............
***
மூலமறியா முரண்...
**
விடுவிக்கப்பட்ட விரல்கள்..;
இரண்டு பாதங்கள்...
*
இருள்.............

Tuesday, January 20, 2009

"வயதுக்கு வருதல்..?"


''அம்மா

எனக்கு

எப்போது

பதினெட்டு

வயதாகும்....?''

எது வரை இது நீளும்...?


மனிதங்கள்
மரணித்து விட்ட
மண்ணில்
கவிதைகளுக்கு என்ன
கடமை....?

கவிஞர்களே...!
கடதாசிகளைக் கொடுங்கள்...
முடிந்தால் இவர்களின்
வயிற்றை நிரப்பட்டும்...
இல்லையேல்,
கண்ணீரையாவது
துடைக்கட்டும்....!

மூடி திறக்கப்பட்ட
பேனாக்களைக் கொடுங்கள்...!
எதற்கும்
கை காவலாய்
சட்டைப்பையில் இருக்கட்டும்...
அதுவாவது....!!

Saturday, August 30, 2008

பட்டம்-விடுகதை..!


கண்ணை எழில் பறிக்க,
கதிர் மெல்லத் தெறித்துப்பளபளக்க
காற்றில் அசைந்தெழுந்து-தென்னம்
கீற்று மறைவினில் முகம் மறைத்து,
கீழ்த்திசை வான் விளிம்பில்-உந்தன்
கோலம் அது கண்டு நான் ரசித்தென்....!


பாட்டின் அடியிடையே ஒரு
பல்லவி சரணத்தின் முடிவினிலே
ஏற்றம் இறக்கமுடன் குரல்
கூட்டி இசை தரும் பாடகன் போல்
கூவிப்பறந்திருந்தாய்-அந்த
கூவல் எனக்கென நான் நினைத்தேன்...!


குஞ்சங்கள் செட்டைகளாய்-விண்
கூவிடும் ஒலியொரு பெண் குரலாய்
நன்செய் நிலமதன் மேல் - நல்ல
நாட்டியம் செய்திடும் தாரகையாய்
காற்றில் மிதந்திருந்தாய்-என்
கண் வழியெ என்னுள் நீ விழுந்தாய்...!



எந்தன் உடமையில்லை-பட்டம்
ஏற்றியோன் பெயரும் எனது இல்லை..;
கந்தன் வயலினிலொ அதைக்
கடந்து கிடக்கும் தெருவினிலோ
எங்கோ இருந்து வரும் இந்த
நூலின் மூலம் தெரியவில்லை....!!



பத்துப் பல நாளாய்-என்
படலையின் மேல் உள்ள வான் வெளியில்
குத்தியெழுந்து எனை
கூவி அழைப்பது போல் உணர்ந்தேன்...!!
பார்த்து இரசித்திருந்தேன்; பட்டம்
பொன் எழிலில் நான் எனை இழந்தேன்...!!!


காற்றின் மிடுக்கினிலே - பல
நாள்கள் பறந்து பழகியதால்
காணும் என உணர்ந்தோ, பட்டம்
கயிற்றை அறுத்து விழுந்தது காண்....!!
சேற்று வயல் புறத்தே-நல்ல
நாற்று நட வந்த ஓர் மனிதன்
தோழில் விழுந்தது போய்
அதை தூக்கி அவனும் முன் நகர்ந்தான்...!


ஏற்றியோன் யானுமில்லை-அதை
ஏற்கும் உரிமை ஏதும் இல்லை...;
இருந்தும் வலிப்பது ஏன்..? ஏதோ
இழந்தது போல் உள்ளம் தவிப்பது ஏன்?

Friday, August 15, 2008

வெற்றிகளின் வேர்கள்.....


வாழ்க்கை என்பது
வரமா, சாபமா
தெரியவில்லை...;
ஒவ்வோர் உயிரியும்
எதற்காகவோ
போராடியபடி.....

சிகரம் கட்டி
நிமிர்ந்து நிற்கும்
நூற்றுக்கணக்கான
வெற்றிகளின் காலடியில்
புதைக்கப்பட்ட
கோடிக்கணக்கான
தோல்விகளின்
முகவரிகளைத் தொலைத்தபடி
நகர்கிறதுகாலம்....

முயற்சித் தூண்களால்
முற்றாக்கப்பட்ட
பாசறைகளின் உச்சியில்
வெற்றிக்கொடியின்
வீரத்தாண்டவம்...!

கல்லறைகளின்
ஆழத்திலிருந்துவரும்
தோல்வியின் கதறல்கள்...,
தமக்கு மட்டும்
காலம் பொய்த்ததாகவும்
கடவுள்
கண் மூடியதாகவும்...

முப்பதாவது காதலில்
வெற்றி கொண்டவனைப் பார்த்துப்
பெரு மூச்சுவிடுகிறான்
முதற் காதலில்தோற்றவன்...!!!

Saturday, April 5, 2008

தெருவோரக் 'கரும் பச்சைகள்'......


உச்சிக்கதிர் மெல்ல
நடு வானம் விலக, வெயில்
உச்சம் தணிக்க
எண்ணுகிற முன் மாலை....!

எச்சமென இருந்த சில
எண்ணெய்த் துளிகளையும்
இழந்து என் வண்டி,
முச்சந்தி முடுக்குகளில்
மூச்சிளுத்து விக்கி
முணு முணுத்து நிற்க முன்னர்..,
முன் தெருவிலிருந்த
'பெற்றோல் செட்' நோக்கி
வண்டி நகர்கிறது,
சந்தி தெரிகிறது....!

அடிக்கடி அவர்களின்
அணிகள் விரைவதனால்
மணிக்கணக்காய் மூடி நமை
தவிக்க விடும்
பெருந்தெருக்கள்....!

இன்றைக்கு ஏதோ
என் காலம் பிழைக்காமல்
முன்னுள்ள வீதி
முழுதும் திறந்துளது...!
இருந்தும் அவ்வோரத்தில்,
''கரும் பச்சை'' துணையோடு
''காக்கிகளின்'' வழி மறிப்பு.....!

மறித்து மடி தடவி,
கை உயர்த்த விட்டு
கமக்கட்டு, இடுப்பு வரை
காசின்றி 'மசாஜ்' செய்து...,
அடையாளம் கேட்டு,
கடமை முடித்திருக்க;

பல தடவை
தெருவில் பார்த்துப்
பதிந்த முகம்...,
பகல் முழுதும்
தெரு வெயிலில்
காய்ந்து நிறம் இழந்து
விழி சுமக்கும் ஏதோ
வகையறியா ஏக்கமுடன்......;
எனை மட்டும் ஏனோ
'போங்க' எனச் சொல்லியது.....!

கரும் பச்சைச் சீருடைக்குள்
ஊடுருவி அம்மனதைக்
காணப் பொழுதில்லை..,
காலம் சரியில்லை.....!

என் வண்டி விரைகிறது...,
எண்ணெய் நிறைகிறது...;
ஏனோ தெரு இன்னும்
நீள்வது போல் தெரிகிறது........!!

Wednesday, March 5, 2008

இதய பாசை...


இதயங்களால்
பேசப்படுவதான பாசை,
காற்றலைகளின்
ஒவ்வோர் அணுவிலும்
கலந்து பரவுகிறது.......

'இழை மணிகளின் தாய்' என
இன்றைய விஞ்ஞானம்
ஏற்றுக்கொள்பவளும்
உலகின் முதல் பெண்ணாய்
பைபிள் சொல்பவளுமாகிய
ஏவாளின் காலத்திற்கு முன்பும்
அதன் நிலவுகை பற்றி
பேசலாம்...

இதயங்கள் தோன்றியபோதே
பேசத்தெரிந்திருந்தது
அவற்றிற்கு....

மருத்துவிச்சியின் கிள்ளலில்
முதல் மூச்சு விடும்
புதுப் பூவிற்குத் தெரிந்த
தாயின் குரலாய்....,
தாயிற்கு மட்டும் புரியும்
கிள்ளை மொழியாய்....,
தனித்துவங்களோடு
பயணிக்கிறது,
இதய பாசை....!

பழக்குவிக்கப்பட்ட புறாக்களின்
இறக்கைகளின் துடிப்பிலும்
பழமையான
காகித மடிப்புகளிலுமான
நிலவுகைகள் மறைந்து,
பின்பு....

சட்டைப்பைக்குள்
சிணுங்கிச்சிரிக்கும்
குறுந்தகவலாய்....,
இணையத்தில்
இறக்கை கட்டிய
வார்த்தைச் சரமாய்.........

எல்லாமும்
செயலிழந்து போன;
மறுக்கப்பட்ட தேசத்திலிருந்து......,
கடல்களும்
கடும் காவல்களும்
கடந்து பரவும்.....,
கோடிக்கணக்கான
சுவாசங்களுக்குள்,
உனது நாசிக்கு மட்டும்
சொந்தமானதை
வகை பிரித்தறியும்
பிரயத்தனத்தில்
எனது இதய பாசை.......!