Sunday, November 11, 2007

தெய்வம் நகும்...!




'ஐயா..'
பொய் உடலின்
பாதாளத்திலிருந்து
பொலிவிழந்தொலித்த
பாவக்குரலின்
ஆவி தனைப் பார்க்க
ஆவலுடன் தலையசைத்தேன்...

வெளுத்த முடியும்-அதை சுமக்கும்
பழுத்த உடலும்
கழுத்து வரை
இழுத்து முடித்த தாடியுமாய்
தழு தழுத்துக் கெஞ்சியது....
"பிச்சை போடுங்க சாமி..."

நடத்துனர் கொடுத்த
மீதிச் சில்லறையை
நடுங்கும் கரத்தில்
நான் வைக்க,
கூப்பிய கைக்கமலம் விரிந்து
முன்னிருந்த
முதலாளி முன் நிலைக்க,
சட்டைப்பை தட்டிக்
கையெடுத்துக் கூசாமல்
சட்டென்று சொன்னார்....
''சில்லறையாய் இல்லையப்பா..."

ஆவி சுமந்து
ஆக்கை,
ஆடி நகர்ந்து விட
வாடி, உடல் மெலிந்து,
வறுமைக் களை படிந்து,
காலிழந்து ,கைத்தடியால்
மேனி சுமந்தவனும்....

பொட்டிழந்து,
பொலிவிழந்து,
பெண் சிசுவை பத்திரமாய்
இடுப்பில் சுமந்தவளும்...

பத்தகவை ஆகாத
பாலகனும் எனப் பல
பாத்திரங்கள் வந்து
கை நீட்டிப் போயின....
பதில் மட்டும் மாறவில்லை... !

பேருந்து புறப்பட
நேரம் நெருங்குகையில்...,
பட்டு நூல் வேட்டி
மடித்து சொருகி- நுதல்
பொட்டுடடனும்
பூசிப் பட்டை வைத்த நீறுடனும்
பக்திமான் ஒருவர்
தட்டுடன் ஏறினார்...

"அம்மாளாச்சிக்கு
அபிஷேகம்...."

இடுப்பின்
மடிப்பவிழ்த்து
பணப்பை திறந்தது...!

சில்லறைகள்
சிலுசிலுக்க
சிரிக்கிறாள் அம்மாளாச்சி.....!!

Saturday, September 1, 2007

தேசமும் கவிதையும்


அன்றோர் தினத்தின்
கதிரவன் எழ முன் - ஒரு
கதிரவன் விழுத்தப்பட்டான்...
மேற்கில் அல்ல...;
வீட்டு வாசலில்...!

பல்லாயிரம் தடவைகள்
நான் கடந்து சென்ற வாசல்
பல நூறு த்டவைகள் தரித்து,
சல்லாபித்த மாலைப்பொழுதுகள்....

நம் கதைகளினைக் கேட்டு
மெளனமாய் சிரித்த மதகு...
எங்கள் இருப்பில்
அது மலர்ந்தது...;
எங்கள் தரிப்பில்
அது தலை நிமிர்ந்தது....

கடந்து தான் போயிற்று,காலம்
கைகளில் பிடிபடாமல்,
நழுவி விழுந்து
நெடு தூரம் போகிறது...!

நேற்றுப்போல் இருக்கிறது
நினைவுகளின் ஈரம்
நெருடல் நிறைந்த
நெஞ்ச வெளிகளில்
வேர் எறிந்து,
நினைவுகள் மட்டும்
முளைத்துக்கொண்டே
இருக்கின்றன....!
செத்துக்கொண்டேயிருக்கிறது
நிஜம்...!!

'சந்திப்போம்' சொல்லி
பிரிந்த பொழுதொன்றில்
சிந்திக்கவே இல்லை;
சந்திக்கவே முடியாத
தலைவிதி பற்றி...!

என் இதயம் பூத்த
தெருவில்,
என் கனவுகள்
கருக்கொண்ட பொழுதில்..,
என்னோடு இருந்தாய் அருகில்.... !

அதே தெருவில்
நீ சுமக்கப்படுகையில்,
நான் நடக்கிறேன் அருகில்.... !!

அன்றோர் பொழுதில்
கதிரவன் ஒருவன்,
கடிதம் சாட்சியாய்
கடவை தான்டினான்...!
இன்னும் பல சூரியன்கள்
வெளியேறிப்போயின... !!

இன்றோர் கதிரவன்
இல்லம் முன்பே
விழுத்தப்பட்டான்...!

இதோ...
கையாலாகாத ஒருவன்
எழுதிக்கொண்டே இருக்கிறான்
கவிதை....
வேறென்ன சொல்ல...?
இயலாமை தானே
இப்படிப் பூக்கிறது....!!

Wednesday, July 25, 2007

நதிமூலம்......







"போரும்
கருக்கொண்டு,
தேசம்
நெருப்புண்டு
குருதி கலந்த
அருவிகளும்
கரும் சாம்பல்
சிதறிய
தெருக்க்ளும்
உருக்கொண்ட
பொழுதுகளில்....

அம்மா பொட்டிழந்து,
அக்கா கற்பிழந்து,
அண்ணா காலிழந்து,
தாய் வயிற்றில்
கருக்கொண்ட
உருவினை
வெறுப்புடன்
எதிர்பார்த்திருந்த
பொழுதுகளில்....

பச்சைப்
பாணைக்கோதி,
மண் கலந்த
பருப்பை விட்டு
பட்டும் படாததுமாய்
வாய்களில்
திணித்திருந்த
பொழுதுகளில்....

பச்சை தண்ணீர்க்காய்
பகல் முழுதும்
வரிசை செய்து,
பொழுது முடியும் வேளை
தாகமடக்கிய
பொழுதுகளில்.....

குவித்த மண்ணில்
தலை வைத்து
குறையாய் உறங்கிய
பொழுதுகளில்.....

விடியலில்
சேவல்களுக்கு பதிலாக
காவலரின்
கணைகள் முழங்கிய
பொழுதுகளில்.....

அந்தரங்கம்
அற்றுப் போன
ஒரு அகதிமுகாமில்...."

எப்படிச் சொல்வது
இத்தனை நீளமாய்....?
தலைநகரில்,
அடையாள அட்டையை
புரட்டியபடி
ஒற்றை வார்த்தையில்
கேட்கிறாய் சோதரா...,
"பிறந்தது...........?"

Sunday, July 22, 2007

காலம்.....


நிலவின்
கறைகளைக் காட்டி
குழந்தை கேட்டது....
'அது என்னம்மா?'
'பெரிய ஒரு தாச்சியிலை
பாட்டி வடை சுடுறா'

குழந்தை வளர்ந்து
குழந்தை பெற்றது...
'அது என்ன பாட்டி?'
குழந்தை
நம்புவதாய் இல்லை;
வடை சுடும் கதைகளை...
"அது
ஷெல் விழுந்த பள்ளமடா
செல்லப் பேரா...!"

தலைமுறை கடந்தது...
அதே கேள்வி;
அதே பதில்...!

குழந்தை
திருப்பிக் கேட்டது;
"மல்ரி பரலா, ஆட்லரியா...?"!!

விக்கிச் செத்தாள்
சோறூட்டிய கிழவி!

Wednesday, June 13, 2007

காதலைப் பாடுதல்....


என் கவிதை பாடுவது
எல்லாமே அரசியலாய்....
பண்பட்ட இதயத்துப்
பாடலெனப் பாசாங்குப்
பொன் பூச்சில் ஊறிப்
பவனி வரும் பாடலொடு
என் மூச்சு நின்றால்
என்னாகும் என் பாடு.....?

இருந்தாலும் இந்த
இயல்பிழந்த தேசத்தில்...
மருந்தேதும் இன்றி
மடிகின்ற குழந்தைக்கு,
குரும்பட்டித் தேர் கட்டி,
குருவிகளின் குரல் காட்டி,
குறுங்கால மகிழ்வூட்ட
பொறுக்குமோ கவி மனசு...?

மண் பட்ட பாட்டை;
மக்கள் உறும் துயரத்தை;
புண் பட்டுப் போகும் எம்
பூவின் மென் இதயத்தை;
கண் கண்ட காடைக்
காட்டேரிக் கடைக்குணத்தை
காகிதத்தில் ஏத்தாத
'கவிப்பாவி' ஆவேனோ?

மண் பட்ட,பெரும் பாடு
மா கொடிது அதை விட-ஓர்
கண் பட்டு நான் பட்ட
கதை பெரிது-காற்று வழி
மென்பட்டு இதழில்
மிதந்து வரும் புன்னகையில்
மின் சொட்டுப் பாய்ந்த-உயிர்க்
காதலைப் பாடுவேன் பின்!

Thursday, June 7, 2007

இருப்பு...



எம்மை பொலிஸ்
பிடித்துப்போகும்...!
இன்றிரவோ-நாளை
விடியலிலோ
இது நடத்தல் கூடும்....!

பல் துலக்கிக்
காலைக்
கடன் கழியா முன் வந்து
பஸ் ஏற்றிப்போவர்,வலிந்து...!

கட்டாத காலி,
களையகற்றல் எனப்பகர்ந்து,
திட்டாத திட்டால்
திசைகள் சுழல,வசை
கொட்டாது கொட்டி
'கொட்டி' என கதை விடுவர்...!

தொட்டாலே மட்டும்
தொலையும், நம் உரிமை;
முட்டாத மட்டும்
மீறுவதாய் அமையாது!

விட்டு விடு...-இனியும்
விட்டு பிடி...!

விசாரணை முடியும் வரை
'கம்பிக் கணக்கை'
கணித்துக்கொள்....!

சந்தேகத்தின் பேரிலோ,
வந்திங்கு தங்கியதை
பொலிசில் பதியாத
காரணமோ
எதுவானாலும்
சில மணிகளேனும்
சிறை வாசம் கூடி வரும்..!

குற்றம் ஒன்றும்
தேவை இல்லை,
தமிழனாய் இருந்தால்-
சிறைக்குதகுதி
தானாய் வரும்...!

'குடு'க் காரன் -கஞ்சா,
கசிப்பு கடத்தியவன்
கூட்டாளி என்பான் உன்னை...!
கூட்டுக்குள் மட்டும்
சமத்துவம் இருக்கும்-எதிர்
பேசாதே,-மானம்
போகுதென்று
கூசாதே...!
'இலது உளது ஆகாது,
உளது இலது ஆகாது;
உள்ளதிலிருந்தே
உள்ளது தோன்றும்!'

கழுத்தெலும்பு
முறியும் வரை
காட்டு
மறு கன்னத்தை!

ஆடைகள் நீக்கி,
உடலில்
பயிற்சி அடையாளம்
பார்ப்பர்...!
'அம்மைப்பால்' குத்தாதே
தமிழா,- உன்
குழந்தைக்கு...!

கம்பிகளின் முன்னணியில்
உன்னை யாரும்
புகைப்படம் எடுக்கப்போவதில்லை..!
எடுத்தால்,
நாளை நீ
தேர்தலில் நிற்பாய்!
மக்களுக்காய்
சிறை சென்றதாய்
கதை அளப்பாய்...!

எம்மை பொலிஸ்
பிடித்துப் போகும்....!
நள்ளிரவில் கூட
இது நடக்கக்கூடும்...!

தலை நகரில்
உனக்கென்ன தொடுப்பு?
விடுதிகளில்
என்ன ஒரு தரிப்பு?
வெளியெறு
வேலையற்ற தமிழா...!
இல்லையேல்,
அதி காலைகளில்
வலிந்து ஏற்றப்படுவாய்!
அப்போது.....
நழுவி,
ஆற்றில் குதி...
கடலில் அது உன்னை சேர்க்கும்...

எதாவது கப்பல் வரும்
ஏறிக்கொள்...!

கரையேற
வேண்டுமென்றால்...,
கப்பல் ஓட்டத்தான் வேண்டுமாம்;
ஒவ்வொரு தமிழனும்....!!

Friday, May 25, 2007

சிவப்பின் தொடக்கம்...!


இனியவளே.....!
நிலவு
உதயமாகாத
ஒருபொன்
அந்திப் பொழுதில்,
அலைகளின்
ஆசீர் வாதத்தோடு,
உன்னை நெருங்க
நினைத்த போது.....
ஆசைக்கு
அடி பணிய
நீ மறுத்தாய்....!

வலிய கரங்களில்
அடங்கிப் போயிற்று-உன்
மெலிய எதிர்ப்பு...!

மெல்ல
நீ உன்
வசம் இழக்கையில்...,
சிவந்தது,
கிழக்கெதிர்...!
விழுந்தது,
கடலில்
ஒளி விளக்கு...!

பிரியும்போது,
நீ சொன்னாய்....

"என் உணர்வுகளையும்
மதிக்காது விடில்
நாம் பிரிந்து செல்வதை விட
வேறு வழி இல்லை..."!!

Thursday, May 17, 2007

பேசப்படாத படுகொலை....!




கவி பல கண்டது மரம்....!
கவிதைகள் வெறும் பூக்கள்
மாலை தொடுங்கள்
காவியமாக.....!

மரம்
மிகப்பெரியது;
மனிதனை விடவும்....!

உயிர் மட்டுமல்ல
மனமும் உளது மரத்திற்கு...;
கொடை மனம் மட்டும்....!

நேற்று என் வளவில்
நெற்றி நிமிர்த்தி
காற்றிசை செய்தது மரம்...

கீழ்த்திசைக் கதிரொளி
பட்டுத்தெறிக்க,
பொட்டொளி சிந்த
புலர்ந்தது பொழுது....

புட்கள் அதன்மிசை உட்கார்ந்திருந்து,
பூபாளம் இசைத்திடப்
புலரும் பொழுதில்
எத்தனை நெட்டிகள்
நாம் முறித்திருந்தோம்.....!

முன்னர் என் பேரன்,
நீட்டி நிமிர்த்தி
முற்றத்து நிழலில்
முறுவலித்துறங்கிட
நிழல் கொடுத்திருந்ததும்
இந்த மரம் தான்.....

எந்தையும் தாயும்
தம் பெயர் பொறித்து
இன்புற இரசித்ததும்
இந்த மரம் தான்......

தாழ்வுற வீசிய
தடித்த கிளையில்
தாங்கியிருந்தது
ஊஞ்சலோடு என்னை.....

பக்கத்து வீட்டுப்
பையன்களோடு
பசு புலி ஆடப்
பார்த்துஇரசித்தது.....

இன்னும் இதற்கு
எத்தனை கதைகள்....!

எத்தனை எறிகணை
தாங்கித் தடுத்தது....!

தெரு விஸ்தரிப்பு
திட்டம் வருகையில்,
வேலி எங்கள்
வீட்டை நெருங்கிற்று...!
மரம் மிக நகர்ந்து,
தெருவிற்கு போயிற்று....!!

நாள்கள் எண்ணத்
தொடங்கிற்று
நம் மரம்....!

வீதி ஏனோ,
குன்றும் குழியும்...!
இருந்தும் கூட,
விதி விடவில்லை;
மரத்தைக்கூட....!

பாதுகாப்பென்றது
'பெரிய' தரப்பு...!

'பதிவுறு கிளைகளில்
பெட்டிகள் வடிவில்
பொருத்துவர்;
வெடித்தால்,
பெரும் துயர்'
என்றது....!

ஒரே தினத்தின்
இரு மணித்துளிகளில்
இறையடி சேர்ந்தது
மரம்.....!

எங்கே உளது
'மர உரிமை ஆணைக்குழு'...?

மரம்
மிகப்பெரியது;
மனிதனை விடவும்...!

இதை விட நண்பா,
நானும் நீயும்
இறந்தே இருக்கலாம்
'கிளை மோர்' வெடியில்....!!

நம் போல் மனிதர்
பிறப்பது சுலபம்...!!!

Tuesday, May 15, 2007

சாவு நெருங்குதல்......!


அவர்களிடம்
பெரியதொரு பட்டியல்
இருக்கிறது....!

ஒருபுறமாக
தேய்வடைவதும்
மறு புறமாக
வளர்தலும்
கொள்ளும் விகிதங்கள்
ஒன்றையொன்று
விஞ்சுவதாய்..;
'மேசைக்கு போதலும்
வெளியேறுதலுமான'
சந்த முறைகளின்
இடையே...
இயக்கமுறுகிறது
பட்டியல்.....

ஒவ்வோர்
கணக்காய்
முடித்துக்கொண்டு வருவர்....

பட்டியல் குறுகுவதில்
முனைப்பாய்...

நேர் நின்றெதிர்த்தோர்,
காட்டிக்கொடுத்தோர்,
மறுபுறம் சார்ந்தோர்,
பெரும் பழி செய்தோர்,
உடன்பட மறுத்தோர்,
எதிருரை செய்தோர்,
எழுத்தில் எதிர்த்தோர்,
தெரு வம்பளந்தோர்.......
எத்தனை என்பது
அவர் கணக்கறியார்...,
பட்டியல் தேய்வதே
பெரு முனைப்பாக.....

தட்டிச்சரித்து
தெருவினில் போடலும்
வெட்டி,
வெளியிடை
வீசி எறிதலும்
பற்றைகளிடையுடல்
பதுக்குதலோடு
பெரு வெளி மணலிடை
புதைத்தலும் நிகழும்...

பட்டியல் தேய்ந்து
குறுகி வருதலில்
குற்றமும் தீவிரம்
குறைந்தே சென்றது...

நேற்றோர்
தெருவினில்
நெற்றி நடுவினில்
ஏற்றிய சன்னம்
உள் சென்றசைந்து
ஈற்றினில் பிடரியால்
வெளிவந்திருக்க
மூளை சிதறி
முளி வெளியேறி
முற்ற வெளியிலோர்
முதியவர்கிடந்தார்...

சந்திக்கடையருக்
குந்திலிருந்து...,
சிந்தும் கடவாய்ச்
சாற்றை துடைத்து,
வெற்றிலை சப்பிய
விசை தலைக்கேறி....
ஒற்றை வார்த்தை
உமிழ்ந்தவர் கிழவர்....!

"அவங்களுக்கென்ன
அரசியல் தெரியும்..."

அடுத்த நாளே
அவர் போய் சேர்ந்தார்...!

பட்டியல் நகருது....
அடுத்த கட்டம்
எதுவெனத்தெரியுமா?

மரணம் நமது
அருகிலெ உள்ளது....!

'சும்மா இருந்தோர்'
சுடப்படுதல்.....!!

இனியும் ஏன் தான்
சும்மா இருப்பான் நீ?

Monday, May 14, 2007

சிலுவையின் சுமை....!




எனக்கும்
ஒரு விருப்பம்...

உங்கள்
பாவங்களை பரிகரிக்க...
எனதையும் சேர்த்து.....

ஆனால்...
மன்னிக்க வேண்டும்,
நண்பர்களே...

என்னால்
சுமக்க முடியவில்லை
இந்த சிலுவையை...

யேசுவின்
காலத்ததை போலல்ல இது...

கனம் மிகுந்த
முதிரையினாலோ
உருக்கினாலோ
செய்யப்பட்டிருக்கிறது...!

புன்னகை...!







வாழ்வின்
பயணங்களில்
இடையிடையே சந்திக்கும்
உன்
ஏகாந்தப் புன்னகை...!

சில நொடிகள்
சலனத்தின் பின்
இயல்பு மீளும்
வாழ்வு....

எல்லோர்க்கும்
நீ வழங்குவது என்றோ
உன் இயல்பு நிலை
அதுவென்றோ
அர்த்தம் சொல்லும்
மனசு...

பல
தடவைகளின் பின்பு....
தோற்றுப்போனதை
ஏற்க மறுக்கும்
திமிர்...

விலங்கிட முடியாத
உணர்வுகளோடு
உன்
புன்னகையின்
அர்த்தத்திற்கான
தேடல்....

இறுதியில்
மனத்திரை கண்டது
'மொனாலிஷா...!'

அர்த்தம்
கண்டதான பூரிப்பு
ஒருநொடிக்கு மட்டும்...!

பின்பு
டார்வின்சியை தேடி
வாழ்வு.....!

Sunday, May 13, 2007

மனிதம்.....

உன்னை
எவளோ ஒரு தாய்
பெற்றிருப்பாள்...

அவள்
யாரென அறிகிலேன்...

இந்தக்கணத்தில்
உன் செய்தி
அவளை
எட்டியிருக்கும்...

நீ
சிதறிப்போயிருக்கிறாய்...;
நான்
முன்பு நடமாடிய
தெரு ஒன்றில்...!

இன்னும்
நினைவிருக்கிறது
எனக்கந்தச் சாவடி...!

சிலபோது அவர்கள்
எங்கள்பரீட்சைகளை
நிறுத்தினர்...
பல போது
பயணங்களில்
இறங்கி,
உருட்டச்சொல்லினர்
சைக்கிள்களை...

சாவடியின்
சற்று தொலைவிலிருந்து,
மாதிரிகள் பல
அனுப்பப்பட்டன...;
சில
சகோதரிகளின்
உள்ளாடைகளோடு...
டீ.என்.ஏ சோதனைக்காய்...!

அதே தெருவில்
நீ இன்று....
சிதறிப்போயிருக்கிறாய்...

நீ
சிலுவைகள் சுமந்தது
பற்றியும்..
உன் கல்லறைகள்
கருவறைகள் ஆவது
பற்றியும்
இனி பேசப்படக்கூடும்....

அது வேறு கதை...

உன்னை
எவளோ ஒரு தாய்
பெற்றிருப்பாள்....

ஓ..!
நீ சிதற வைத்த
பண்டாரவையும்....!

Thursday, May 10, 2007

வேலிகள்...

நீண்ட
இடைவெளிக்கு பிறகு
நாங்கள் சந்தித்திருந்தோம்....

ஆரத்தழுவி
தோளில் கையிட்டபோது,
'அது' தட்டுப்பட்டது....

"நீ...."
என்றேன்...
"ஓம் நாங்கள்சேர்ந்திட்டம்"
அறுபது வயது
அப்பாவைச் சுட்டினான்...

நெஞ்சின்
நரைத்த மயிர்களுக்கிடையில்
'அது' தொங்கியது...
அவன்
அக்காவின் கழுத்திலும்...
இல்லை,
அது மஞ்சள் நூல்...!
'அந்த'சின்னம்துலங்கியது...

தாலி பெண்ணுக்கு
வேலி என்பார்களே...?

'ஆமாம்;
களமும்
கணவனும்
தாண்டி அகல விடாத....'
ஓ...!
தேவைப்பட்டால்,
தேசத்திற்கும்.........!

மெளனித்தேன்...
அவன் இப்போது
உள்ளே இருக்கிறான்...!

'காக்கை வன்னியர்...'

தெருவோரமாக
இருவர் ஆயுதங்களோடு....
முருகப்பன்
அருகில் வந்து
மெதுவாய் சொன்னான்...

"பின்னுக்கு
நாலைந்து பேர்
நிக்கினம்...
பெரும்பாலும்
பெட்டையள்...."

ஆபத்தை
உணர முன்பே
பிடிக்கப்பட்டு
திமிறத் திமிற.....

முருகப்பன்சிரிக்கிறான்...
ஏற்றிக்கொண்டு
வண்டிபுறப்பட்டது...

வாரிசுகள்....,
குரைத்துக்கொன்டுவெளிவந்தன...!!

முருகப்பன்
மூக்கை சுழித்தான்...!
'இதுகள் இனி
வளரத்தான் போகுது...'!!!

Wednesday, May 9, 2007

உடமைகளோடு...

குஞ்சுக்குடிசை...
கூரை செல்லரித்து,
நீலம் தெரியும்...;
நீர் சேரும்,மாரியினில்...!

பட்ட கதிகால்;சில
பழைய துருப்பேணிகள்...

ஊசித்துளைகளினால்
உருக்குலைந்த பழம் பானை...

போன முறை ஓடித்
திரும்புகையில்,
தெருவிலெடுத்த
பச்சைப் பெட்டி நிறைய,கிளிஞ்ச
பழம் சேலைகள்...

வாலை ஆட்டியபடி ஒரு
குட்டி நாய்...!

பல் விழுந்த வாயின் புறுபுறுப்பு...
"நான் சேர்த்ததுகள்...,
விட்டிட்டு போகேலா;
வாறது வரட்டும்"!!

பயம்..!


நிலவு சிந்திய
ஒளியின் துளிகள்,
மரக்கிளை தழுவி
நிலத்தில் வடிந்தன...
காற்று இரைந்தது...;

தூர திசையில்
துவக்கு வெடிகள்
அமைதி கலைத்தன...

'அசோக்கா' மரத்து
இலை குழை மறைவில்
'நத்து' ஒன்றிருந்து
'நக் நக்' என்றது....

எங்கோ தொலைவில்
நீள் வால் குருவி
நிசப்தம் கலைத்தது...

ஊழிக்குரலென
நாய்கள் கூடி
ஊழையிட்டன...

'பேரழிவு' என்றது
பேத்திக்கிழவி...!

விடியும்பொழுது..,
வரப்புகளோடு....
சீருடைகள் சில...!

பெட்டைகள் மூன்று..
பாவம் தாய்க்கும்
நாற்பது வயது...
பெடியளும் இரண்டு..

'காடையர்' என்றது
கண்ணுக்கிழவி...

கதவில் தட்டொலி
கேட்கலாயிற்று...!!

சலனம்...

முத்தாகி என்னுள்
முழுதாய்அமிழ்ந்திட்டாய்...

இத்தால் உலகில்
இன்பங்கள் யாவும்
வைத்தாள்,பராசக்தி;
உன்னிடத்தில்
எந்தனுக்கு...?

இதழிடுக்கில் ஊர்ந்து,
சுழித்துச் சிலிர்க்கின்ற
புன்னகைக்குள்
என்னை
பொறி வைத்தாய்...
போதை விழிவைரத்து
மளிக்காத
விளிம்புகளால்
கோலம் வரைகின்றாய்
இதயத்துள்...
காலமிது
கெட்டுக்கிடக்கிறது;என் வாழ்வு,
சாலை நடு மீது
சரிந்துளது...!

கல் எனவோ;காலில்
காயம் விளைவிக்கும்
முள்ளெனவோ-தூக்கி
வீச மறுக்கிறது மனசு..!

காலம் கனியும் பொழுதுகளில்
மீண்டும் உன்
'ஜாலம்' தொடரட்டும்...
இன்று போய்நாளை வா...!

Tuesday, May 8, 2007

வெறி..!

உலகின்
பெரும் துயர்
எதுவென வினவினாய்...

மேல்,கீழ்
எனப்பெரும்
தேசம் பிரித்தலும்..
நிலத்திடை
கண்டப்பிரிவுகள்
செய்தலும்..
தேசியம் பேசி
மானிடம் மறத்தலும்..
கறுப்பினம் என்றொரு
ஒறுப்புகள் செய்தலும்..
கடவுளின் பெயரில்
மத வெறி கொள்ளலும்
ஈனம்;அதிற்
கடை ஈனம்
அறிவையோ?

உன்னில் நானும்
என்னில் நீயும்
வேறென்றுணர்தல்...!

நன்றி

எங்கள்
பயணத்தின்
பாதைகளில்
மறந்தே போனோம்...!

கட்டவிழ்ந்த சுமையை
கட்டி விட்டவனை..,
கால் செருப்பு
தைத்தவனை.,
காய்ந்த நா
நனைத்தவனை...;

இன்னுமொன்றை...,
காத தூரம் தொடர்ந்து வந்து
களைத்து வீழ்ந்த
கறுப்பனை..!!

சில சல சலப்புகளின் முடிவு..!


இருளின் ஒரு துளி
உருகி உறைந்து,
திரள் கொண்டிருப்பது போலும்- சுவரினில்
உருக்கி தெளித்த கரு'மை'
உறைந்து,
உயிர் கொன்டசைவது போலும் இருந்தது...

மின்சூழ் ஒளியின் கற்றைகள் பட்டு
மிளிர்ந்தது;மெல்ல
மிரண்டே அசைந்தது...

தென் ஈர்க்கு கற்றைகளின்
கால் தீண்ட உவப்பிலா
இடுக்கில் நுளைந்து,
உடலம் மறைத்தது ...

பாதி அடி பட்டு
பதறிப் பதை பதைத்து
நாசினியில்,
நாசி
நாற்றமிசை துயருற்று
நான் ஏறி ஓடும்
ஈருருளி மீது
இடுக்கில் ஒளிந்துளது...!

இறந்ததுவோ இல்லை
இறங்கிமறைந்ததுவோ...?
உறுதிப்பாடில்லாது
இருக்கையினில் ஏறி
இருப்பது தான் எவ்வாறு..?

சக்கரத்தின் மேலிடுக்கில்,
சீற்றடியில்,
செயின் கவரில்
சிக்கியதோ என்று பெரும் தேடல்...!

ஆளுக்கு ஆள் மாறித்
தேடியதில்;திகில் கொண்டு
ஓடியதில்,வந்து
கூடியது அயல்..!

அரை மணியின் பின்
அமைதி தொலைத்திருக்க,
சற்று தொலைவில்...,
எப்போதோசெத்துப்போய்
அமைதியாய் கிடந்தது,
சிலந்தி..!

ஒரு இனிய உதயம்...!

ஓரு
புதுப்பூவின்வாசம்
முகரப்படுகையில்..,
எழுதப்படுகிறது,
ஒரு மொட்டிற்கானமுகவரி....!

மனிதர்களாய் வாழ்தல்.....

எம்மை நாமே
மனிதர்கள்என்றோம்.....,
மனிதர்களை காணும் வரை..!
மிருகங்கள் தம்மை
தாழ்வாய் எண்ணின..;
எம்மை காணும் வரை....!

Thursday, May 3, 2007

பாரதி மூட்டிய தீயுடன் என் வேள்வி...!

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்குவாழ்ந்திடுதல்
நன்றோ? சொல்லீர்!


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்....."


- சுப்பிரமணிய பாரதியார்.

THE FIRST FLY

Hi Dear All,


Please wait for the first fly of VAANAMPAADI.........